ரமலானை வரவேற்க வேண்டிய மிகச் சரியான முறை

ரமலான் மாதத்தின் வருகை, அதை நாம் மிகச் சிறந்த முறையில் வரவேற்க வேண்டும் என்று நம்மிடம் கோருகிறது. ரமலானை வரவேற்பதில் ஒருவருக்கு உண்மையான பலன் கிடைப்பது என்பது முக்கியமாக நான்கு அடிப்படை விஷயங்களை (அஸ்ஸல்கள்) அடிப்படையாகக் கொண்டது.

முதல் அடிப்படை:  ரமலானுக்கு முன்புள்ள துஆ (பிரார்த்தனை)

அல்லாஹ் கூறுகிறான்:

وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِیۤ أَسۡتَجِبۡ لَكُمۡۚ

“உங்கள் இறைவன் கூறுகிறான்: நீங்கள் என்னிடம் பிரார்த்தனை செய்யுங்கள்; நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்” (திரு குர்ஆன்: 40/60).

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ

” பிரார்த்தனையே வணக்கமாகும் ” ( திருமதி , அபூதாவூது, இப்னுமாஜா)

ரமலானை வரவேற்பதில் பயனுள்ள பிரார்த்தனைகள் மூன்று வகைப்படும்:

ரமலான் மாதத்தை அடைவதற்கான பிரார்த்தனை:

ஒரு அடியான் தனது இறைவனிடம் தன்னை ரமலான் மாதத்தில் சேர்த்து வைக்குமாறு வேண்டுவது. அவன் இவ்வாறு கேட்கிறான்:

اللَّهُمَّ بَلِّغْنَا رَمَضَانَ

யா அல்லாஹ்! எங்களை ரமலானில் சென்றடையச் செய்வாயாக.

நற்செயல்கள் செய்யத் தவ்ஃபீக் (உதவி) பெறுவதற்கான பிரார்த்தனை:

ரமலானில் நோன்பு நோற்பதற்கும், தொழுவதற்கும், அல்லாஹ் நேசிக்கக்கூடிய பிற நற்செயல்களைச் செய்வதற்கும் உதவி கோருதல்.

اللَّهُمَّ أَعِنَّا فِيهِ عَلَى الصِّيَامِ وَالْقِيَامِ، وَمَا تُحِبُّ مِنْ سَائِرِ الْأَعْمَالِ

யா அல்லாஹ் இம்மாதத்தில் நோன்பு நோற்கவும், நின்று வணங்கவும் (தொழவும்), இன்னும் பிற நற்செயல்களில் நீ விரும்புபவற்றைச் செய்யவும் எங்களுக்கு உதவி செய்வாயாக.

செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படவும் நரக விடுதலையை அடையவும் செய்யப்படும் பிரார்த்தனை:

தனது நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களின் கூட்டத்தில் சேர்க்கப்படவும், நரகத்திலிருந்து விடுதலை பெற்று வெற்றியடையவும் அல்லாஹ்விடம் வேண்டுதல்.அவன் இவ்வாறு கேட்கிறான்:

اللَّهُمَّ اجْعَلْنَا فِي رَمَضَانَ مِنَ الْمُتَقَبَّلِينَ، وَاخْتِمْ لَنَا بِالْعِتْقِ مِنَ النِّيرَانِ

யா அல்லாஹ்! ரமலானில் எங்களை (நற்செயல்கள்) ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களின் கூட்டத்தில் சேர்ப்பாயாக; மேலும் நரக நெருப்பிலிருந்து விடுதலை அளித்து எங்களுக்கு அருள்புரிவாயாக.”

இரண்டாம் அடிப்படை: நற்செயல்கள் செய்ய வேண்டும் என்ற தூய்மையான நிய்யத் (எண்ணம்)

ரமலானில் தான் நற்செயல்களைச் செய்வேன் என்று ஒரு அடியான் தனது இதயத்தில் உறுதி பூண வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

{ قُلۡ أَتُعَلِّمُونَ ٱللَّهَ بِدِینِكُمۡ وَٱللَّهُ یَعۡلَمُ مَا فِی ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَمَا فِی ٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ بِكُلِّ شَیۡءٍ عَلِیمࣱ }

“(நபியே!) கூறுவீராக: (‘‘நீங்கள் மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று) உங்கள் வழிபாட்டை(யும், பக்தியையும்) நீங்கள் அல்லாஹ்வுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிந்தவன். (தவிர, மற்ற) எல்லா பொருள்களையுமே அல்லாஹ் நன்கறிந்தவன்.” [ திரு குர்ஆன் : 49/16]

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ

“நிச்சயமாகச் செயல்கள் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன”. (புகாரி, முஸ்லிம்)

இமாம் அஹ்மத்( ரஹி) அவர்கள் தனது மகனிடம் கூறுவார்கள்:

يَا عَبْدَ اللَّهِ، انْوِ الْخَيْرَ؛ فَإِنَّكَ وَإِنْ لَمْ تَعْمَلْ، فَنِيَّةُ الْخَيْرِ لَكَ عَمَلٌ

“மகனே! நீ நன்மை செய்ய எண்ணு; ஏனெனில் நீ அதைச் செய்யாவிட்டாலும், நன்மை செய்ய வேண்டும் என்ற உனது எண்ணமே ஒரு நற்செயலாகப் பதிவு செய்யப்படும்”.

ரமலானை வரவேற்பதில் பயனுள்ள எண்ணங்கள் இரு வகைப்படும்:

▪️பொதுவான எண்ணம் (நிய்யத் முஜ்மலா): இந்த மாதத்தில் நிறைய நன்மைகளைச் செய்வேன் என்று பொதுவாகக் கருதுவது.

▪️ விரிவான எண்ணம் (நிய்யத் முஃபஸ்ஸலா): நோன்பு, தொழுகை, குர்ஆன் ஓதுதல், தர்மம் என தான் செய்யப்போகும் செயல்களைத் திட்டவட்டமாக இதயத்தில் உறுதி செய்வது.

மூன்றாம் அடிப்படை: நற்செயல்களின் பலன் தனக்கே கிடைக்கிறது என்ற விழிப்புணர்வு

தான் செய்யும் நற்செயல்களின் பலன் தனக்கே கிடைக்கிறது என்று மனதிற்குத் தெளிவுபடுத்துதல். அல்லாஹ் வழங்கிய ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை நற்செயல்களில் பயன்படுத்த வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறது:

مَّنْ عَمِلَ صَٰلِحًا فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ أَسَآءَ فَعَلَيْهَا ۗ

எவர் நன்மைகள் செய்கிறாரோ, அது அவருக்கே நன்று. எவர் பாவம் செய்கிறாரோ, அது அவருக்கே கேடாகும். (திரு குர்ஆன்: 41/46).

فَمَنۡ أَبۡصَرَ فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ عَمِیَ فَعَلَیۡهَاۚ

எவன் (சத்தியத்திற்குரிய பல ஆதாரங்களை கவனித்து) பார்க்கிறானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கிறானோ (அது) அவனுக்கே கேடாகும். (திரு குர்ஆன்: 6/104)

قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا ‎﴿٩﴾‏ وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا ‎﴿١٠﴾‏

எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார்.
எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். (திரு குர்ஆன் :91/9, 10 )

مَّنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا یَهۡتَدِی لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا یَضِلُّ عَلَیۡهَاۚ

எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான்.
(திரு குர்ஆன் : 17/15)

நற்செயல்கள் தனக்கே லாபம் தரும் என்ற உணர்வு ஒருவனை ரமலான் காலத்தை அல்லாஹ்விற்கு நெருக்கமாகப் பயன்படுத்தத் தூண்டும்.

 நான்காம் அடிப்படை: நோன்பின் சட்டங்களை அறிந்து தயாரிப்பு செய்தல்

அல்லாஹ் கூறுகிறான்:

وَمَنۡ أَحۡسَنُ دِینࣰا مِّمَّنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنࣱ

“தூய்மையான மனதுடன் அல்லாஹ்விடம் தன்னை ஒப்படைத்து, நற்செயல் புரிபவரை விட அழகிய மார்க்கமுடையவர் யார்?” (திரு குர்ஆன்: 4/125).

அதாவது, உண்மையான மனதுடன் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து, தனது மார்க்க விஷயங்களில் ‘முஹ்சின்’ (நன்மை செய்பவர்) ஆக இருப்பவரை விடச் சிறந்த மார்க்கமுடையவர் எவருமில்லை. மார்க்க விஷயங்களில் ‘இஹ்ஸான்’ (நன்மை) என்பது நபி ﷺ அவர்களின் வழிமுறையைப் (சுன்னத்தைப்) பின்பற்றி நடப்பதாகும்.

ரமலானில் நுழையும் ஒருவர் அது தொடர்பான மார்க்கச் சட்டங்களை (ஷரீஆ அஹ்காம்கள்) கற்க வேண்டும். ஒரு கடமையைச் செய்வதற்கு முன்பு அது குறித்த அறிவைப் பெறுவது அடியானின் மீது கட்டாயமாகும் (ஃபர்ழ்). ரமலான் நோன்பு யாருக்கெல்லாம் கடமையோ, அவர்கள் நோன்பு தொடர்பான சட்டங்களைக் கற்பதும் கடமையாகும்.

 

ஷேக் ஸாலிஹ் அல் உஸைமி ( ஹஃபி)

 

www.kanzululoom.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *