மதிக்கத்தக்க அறிஞர் ஹம்து பின் இப்ராஹீம் உஸ்மான் (حفظه الله) எழுதிய அரபு நூலின் அறிமுகப் பகுதியின் மொழிபெயர்ப்பு இதுவாகும்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வின் தூதர் ﷺ மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். அல்லாஹ் தனது படைப்புகள் அனைத்தையும் ஒரு தூய இயற்கையிலேயே (பித்ரா) படைத்துள்ளான். புனித குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
فِطۡرَتَ ٱللَّهِ ٱلَّتِی فَطَرَ ٱلنَّاسَ عَلَیۡهَاۚ
எந்த இயற்கை (மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை (மார்க்க)மாகும்
(திரு குர்ஆன் 30:30)
உண்மையை இலக்காகக் கொள்வதும், நேசிப்பதும் மனித இயற்கையின் அடிப்படைத் தன்மையாகும்.
قال شيخ الإسلام ابن تيمية رحمه الله :والقلب خُلِق يُحب الحقَّ ويُريده ويَطلبه
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையை நேசிப்பதற்கும், அதை இலக்காகக் கொண்டு தேடுவதற்கும் ஏற்ற வகையிலேயே மனித இதயம் படைக்கப்பட்டுள்ளது.”(மஜ்மூஉல் ஃபதாவா 10/88)
وقال أيضًا : فإنّ الحق محبوب في الفطرة، وهو أحب إليها وأجلّ فيها، وألذ عندها من الباطل الذي لا حقيقة له، فإنّ الفطرة لا تحب ذلك.
அவர் மேலும் கூறுகிறார்: “உண்மையின் மீதான நேசம் மனித இயற்கையிலேயே பின்னிப் பிணைந்துள்ளது. அர்த்தமற்ற பொய்களை விட உண்மையே மனித இயற்கைக்கு அதிக இன்பத்தையும் மகத்துவத்தையும் தருகிறது. ஏனெனில் மனித இயற்கையினால் ஒருபோதும் பொய்யுடன் ஒத்துப்போக முடியாது.”(மஜ்மூஉல் ஃபதாவா 16/338)
உண்மையை நோக்கிய ஈர்ப்பு
மனதின் ஆழத்தில் பதிந்துள்ள உண்மையின் மீதான நேசத்திற்கு மேலாக, மனித மனம் இயல்பாகவே உண்மையை கண்டடைவதில் விருப்பம் கொண்டுள்ளது. மூஸா (அலை) அவர்கள் இறைவனைப் பற்றிக் கூறியது போல:
قَالَ رَبُّنَا ٱلَّذِىٓ أَعْطَىٰ كُلَّ شَىْءٍ خَلْقَهُۥ ثُمَّ هَدَىٰ
அதற்கு மூஸா ‘‘எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவற்றை பயன்படுத்தும்) வழியையும் (அவற்றுக்கு) அறிவித்தானோ அவன்தான் எங்கள் இறைவன்” என்றார்.
(திரு குர்ஆன் 20:50)
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:
قال النبي :الإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ.
“பாவம் என்பது உனது உள்ளத்தில் உறுத்தலை ஏற்படுத்துவதும், மக்கள் அதை அறிவதை நீ வெறுப்பதுமாகும்.” (முஸ்லிம்:2553)
قال شيخ الإسلام ابن تيمية رحمة الله: في النَّفس ما يوجب ترجيح الحق على الباطل في الاعتقادات والإرادات وهذا كافٍ في كونها ولدت على الفطرة
இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகிறார்: “நம்பிக்கைகளிலும் இலக்குகளிலும் பொய்யை விட உண்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய ஒரு விஷயம் மனித மனதிலேயே உள்ளது. மனிதன் தூய இயற்கையில்தான் பிறந்துள்ளான் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.” (தர்உ தாருதுல் அக்வல் வா நகல் 3/463.)
وقال أيضا : والله – سبحانه وتعالى – خلق عباده على الفطرة التي فيها الحق والتصديق به ومعرفة الباطل والتكذيب به، ومعرفة النافع الملائم والمحبة له ومعرفة الضار المنافي والبغض له بالفطرة.
அல்லாஹ் தனது அடியார்களை உண்மையை ஏற்றுக்கொள்வதற்கும், பொய்யை அடையாளம் கண்டு மறுப்பதற்கும்; தனக்கு பொருத்தமான பயனுள்ளவற்றை அறிந்து நேசிப்பதற்கும்; தனக்கு எதிரான தீயவற்றில் இயல்பான வெறுப்பைக் கொள்வதற்கும் ஏற்ற இயற்கையிலேயே படைத்துள்ளான்.(தர்உ தாருதுல் அக்வல் வா நகல் 3/463.)
உண்மையில் நிலைத்திருப்பதை மனித இயற்கை உறுதிப்படுத்துகிறது. எது பயனுள்ளதோ அதை அடையாளம் கண்டு, விரும்பி ஏற்றுக்கொள்வதே ‘நன்மை’ எனப்படுகிறது. மாறாக, உண்மையில்லாத பொய்யானவற்றை மனித இயற்கை வெறுத்து ஒதுக்குகிறது. அல்லாஹ் கூறுகிறான்:
يَأْمُرُهُم بِٱلْمَعْرُوفِ وَيَنْهَىٰهُمْ عَنِ ٱلْمُنكَرِ
(இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்.
(புனித குர்ஆன் 7:157)
உண்மையை உணர்வதும் அதை நேசிப்பதும் மனித மனதில் வேரூன்றி இருப்பதற்கு மார்க்க ரீதியான ஆதாரங்கள் உள்ளன. அல்லாஹ் கூறுகிறான்:
أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّهِۦ وَيَتْلُوهُ شَاهِدٌ مِّنْهُ
எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ (திரு குர்ஆன் 11:17)
فالبينة الوحي الذي أنزله الله، والشاهد هو شاهد الفطرة المستقيمة، والعقل الصريح
இங்கு ‘தெளிவான சான்று’ என்பது அல்லாஹ் இறக்கியருளிய ‘வஹி’ (இறைச்செய்தி) ஆகும். ‘சாட்சி’ என்பது நேர்மையான மனித இயற்கையும் தெளிவான புத்தியும் ஆகும்.(தைஸீருல் கரீமிர் ரஹ்மான், பக்கம் 379)
قال العلامة عبد الرحمن السعدي رحمة الله: فالدين هو دين الحكمة التي هي معرفة الصواب والعمل بالصواب، ومعرفة الحق والعمل بالحق في كل شيء.
அல்லாமா அப்துர் ரஹ்மான் அஸ்-ஸஃதி (ரஹ்) அவர்கள் கூறியதாவது, மார்க்கம் என்பது ஞானத்தின் (ஹிக்மத்) மார்க்கமாகும். அந்த ஞானம் என்பது சரியானதை அறிந்து அதன்படி செயல்படுவதும், ஒவ்வொரு விஷயத்திலும் சத்தியத்தை (உண்மையை) அறிந்து அந்த சத்தியத்தின்படி செயல்படுவதுமாகும்.”(தைசீருல்லாஹ்த்வீஃபில் மன்னன், பக்கம் 50)
மனித மனங்கள் தங்களின் தூய இயற்கையில் (பித்ராவில்) நிலைத்திருந்தால், அவை சத்தியத்தைத் தவிர வேறொன்றையும் தேடாது. சத்தியம் என்பது தெளிவானது, அதில் ஒருபோதும் மர்மங்கள் இருக்காது.
قال معاذ بن جبل ـ رضي الله عنه : فإنّ على الحق نورا
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக உண்மையின் மீது ஒரு பிரகாசம் (ஒளி) இருக்கும்.”(ஹக்கீம், அல்-முஸ்தத்ரக் 4/460)
யூதராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அவரது முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே அவர் உண்மையாளர் என்பதைப் புரிந்து கொண்டார்.
قال عبد الله بن سلام – رضي الله عنه -: «لما قدم النبي ﷺ انجفل الناس عليه فكنت فيمن انجفل، فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب، فكان أول شيء سمعته يقول: «أفشوا السلام، وأطعموا الطعام، وصلوا الأرحام، وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام .
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வந்தபோது, மக்கள் அவர்களை நோக்கி விரைந்தனர். நானும் அவர்களுடன் சென்றேன். நான் அவரது முகத்தைப் பார்த்தபோது, அது ஒரு பொய்யரின் முகமல்ல என்பதை அறிந்து கொண்டேன். அவரிடமிருந்து நான் கேட்ட முதல் வார்த்தைகள் இவைதான்: ‘மக்களே! உங்களுக்கிடையில் ஸலாத்தைப் பரப்புங்கள், (ஏழைகளுக்கு) உணவளியுங்கள், உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள், மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுங்கள்; (இவற்றைச் செய்தால்) நீங்கள் நிம்மதியுடன் சுவனத்தில் நுழைவீர்கள்’.”(அஹ்மத், அல்-முஸ்னத் 5/451, திர்மிதி 5/652, எண் 485.)
அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டில் விடுவதும், தன் நாட்டப்படி நேர்வழியில் நடத்துவதும் அவனது மகா ஞானத்தின் (யுக்தி) ஒரு பகுதியாகும். எனினும், அதோடு கூடவே படைப்பினங்களுக்காக அத்தாட்சிகளை அவன் நிலைநிறுத்தியுள்ளான், தூதர்களை அனுப்பியுள்ளான், மேலும் சத்தியத்தை வெற்றிபெறச் செய்கிறான்.
ஆகவே, ஒரு அடியான் தனது இயல்பான நற்பண்புகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்; சத்தியத்திலிருந்து தன்னைத் தடுத்து திசைதிருப்பும் அனைத்துக் காரணங்களைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவேளை அவன் வழிதவற நேர்ந்தாலும், மீண்டும் சத்தியத்தின் பக்கம் திரும்பி அதை ஏற்றுக்கொள்வது அவசியமாகும். இவ்வாறு ஒரு அடியான் சத்தியத்தை நேசிப்பது என்பது, அல்லாஹ்விடமிருந்து அவனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும்.
قال أبو محمد ابن حزم رحمة الله: أفضل نعم الله على العبد أن يطبعه على العدل وحبّه، وعلى الحق وإيثاره.
அபூ முஹம்மது இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் ஒரு அடியானுக்கு வழங்கும் அருட்கொடைகளில் மிகச் சிறந்தது, அந்த அடியானின் இயற்கையிலேயே நீதியையும் அதன் மீதான நேசத்தையும், சத்தியத்தையும் (உண்மை) அதற்கு முன்னுரிமை அளிப்பதையும் ஆழமாகப் பதியச் செய்வதாகும்”. (முதாவதுன்னுஃபஸ், பக்கம்:31.)
وقال ابن القيم – رحمه الله -: فإنّ الكمال الإنساني مداره على أصلين : معرفة الحق من الباطل وإيثاره عليه وما تفاوت منازل الخلق عند الله تعالى في الدنيا والآخرة إلا بقدر تفاوت منازلهم في هذين الأمرين، وهما اللذان أثنى الله سبحانه على أنبيائه بهما في قوله تعالى : {وَٱذْكُرْ عِبَٰدَنَآ إِبْرَٰهِيمَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ أُو۟لِى ٱلْأَيْدِى وَٱلْأَبْصَٰرِ} [ص: ٤٥]. فالأيدي : القوي في تنفيذ الحق.
இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “மனிதனின் முழுமை என்பது இரண்டு அடிப்படைகளைச் சார்ந்துள்ளது:
பொய்யிலிருந்து உண்மையைப் பிரித்தறிதல் மற்றும் அதற்கு முன்னுரிமை அளித்தல். இவ்விரண்டு விஷயங்களில் படைப்பினங்களின் நிலைகள் மாறுபடுவதைப் பொறுத்தே தவிர, இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்விடத்தில் அவர்களின் அந்தஸ்து வேறுபடாது. அல்லாஹ் தனது தூதர்களைப் புகழ்ந்ததும் இந்த இரண்டு பண்புகளைக் கொண்டே ஆகும்: {(வலிமை மிக்கவர்களாகவும், நுண்ணறிவு உள்ளவர்களாகவும் இருந்த நமது அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக் மற்றும் யஃகூப் ஆகியோரையும் நினைவுகூர்வீராக. (38:45)}. இங்கு ‘கைகள்’ (வலிமை) என்பது சத்தியத்தை செயல்படுத்துவதற்கான ஆற்றலையும், ‘பார்வை’ (நுண்ணறிவு) என்பது மார்க்க விஷயங்களில் உள்ள தெளிவான ஞானத்தையும் குறிக்கிறது. எனவே, சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு அதைச் செயல்படுத்துபவர்களாக அல்லாஹ் அவர்களை வர்ணித்துள்ளான்.” (அல்-ஜவாபுல் காஃபி, பக்கம் 139).
சத்தியத்தில் உறுதியாக இருப்பதற்கான ஒரு வழி, அதிலிருந்து ஒருவரைத் தடுக்கும் காரணிகள் எவை என்பதைத் தெரிந்து கொள்வதாகும். சத்தியத்திலிருந்து திசைதிருப்பும் சில காரணிகள் இங்கே விளக்கப்படுகின்றன. அவற்றை அறிந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும். நம்மை சத்தியத்தின் மக்களிலும் அதன் ஆதரவாளர்களிலும் சேர்த்தருளவும், வழிகேட்டிற்கும் வீழ்ச்சிக்கும் இட்டுச்செல்லும் காரணிகளிலிருந்தும் வழிகளிலிருந்தும் நம்மைத் தள்ளி வைக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்.
சத்தியத்தை அடைவதற்கான இந்தத் தடைகளின் சுருக்கம் என்பது:
துர்நோக்கம் (القصد), அறியாமை (الجهل), அநீதி (الظلم)
மற்றும் நேர்வழி இல்லாததால் ஏற்படும் தவறான நடத்தை ஆகியவற்றிலிருந்தே பிறக்கின்றன. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
உண்மையை உணர்ந்து அதைப் பின்பற்றுபவர்களில் அல்லாஹ் நம்மையும் இணைப்பானாக.
www.kanzululoom.com