அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதன் மார்க்க சட்டம் மற்றும் அதன் சிறப்புகள்

அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது (தஃவா) கட்டாயக் கடமையாகும் (ஃபர்ழ்) என்பதையும், அது மார்க்கக் கடமைகளில் ஒன்று என்பதையும் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

அல்லாஹ் கூறுகிறான்:

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى ٱلْخَيْرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ ۚ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர். திரு குர்ஆன் – 3/104

ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ

(நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. திரு குர்ஆன் – 16/125

وَادْعُ إِلَىٰ رَبِّكَ ۖ وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ

ஆகவே, உமது இறைவன் பக்கம் (நீர் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருப்பீராக. நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம். (திரு குர்ஆன் – 28/87)

قُلْ هَـٰذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي

(நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம்.” திரு குர்ஆன் -12/108

அல்லாஹ்வின் தூதரை (ﷺ) பின்பற்றுபவர்கள் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பாளர்களாகவும், தெளிவான ஞானம் (உள்நோக்கு) கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். அல்லாஹ்வின் தூதரை (ﷺ) பின்பற்றுவதும், அவர் காட்டிய வழியில் நடப்பதும் கட்டாயமான (பர்ளான) காரியமாகும். அல்லாஹ் கூறுகிறான்:

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள். (திரு குர்ஆன்: 33/21)

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பது (தஃவா) என்பது ‘ஃபர்ளு கிஃபாயா’ (சமூகக் கடமை) என்று அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் போதுமான அளவு அழைப்பாளர்கள் இருந்தால், அது ‘ஃபர்ளு கிஃபாயா’ ஆகும். ஒவ்வொரு ஊருக்கும் தஃவா பணிகளும் அதற்கான செயல்பாடுகளும் அவசியமாகும். போதுமான நபர்கள் இப்பணியைச் செய்துவிட்டால், மற்றவர்கள் மீதான அந்தப் பொறுப்பு நீங்கிவிடும். அப்போது மற்றவர்களுக்கு தஃவா பணி என்பது ஒரு வலுவான சுன்னத்தாகவும், மகத்தான நற்செயலாகவும் மாறிவிடும்.

இருப்பினும், ஒரு ஊரில் உள்ள மக்கள் தஃவா பணியை முழுமையாக நிறைவேற்றத் தவறினால், அந்தப் பாவம் அனைவரையும் சாரும். அப்போது ஒவ்வொருவரும் தத்தமது திறமைக்கு ஏற்ப தஃவா செய்வது கடமையாகும். உலக நாடுகளைக் கருத்தில் கொள்ளும்போது, பூமியின் எல்லாப் பகுதிகளிலும் அல்லாஹ்வின் செய்தியை எத்தி வைக்கவும், அவனது கட்டளைகளைத் தெளிவுபடுத்தவும் ஒரு சாரார் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல இடங்களுக்கு அழைப்பாளர்களை அனுப்பியும், மக்களுக்கும் அரசர்களுக்கும் கடிதங்கள் எழுதியும் அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துள்ளார்கள்.

நமது காலக்கட்டத்தில், முன்னோர்களுக்குக் கிடைக்காத பல வழிகளில் அல்லாஹ் தஃவா பணியை எளிதாக்கியுள்ளான். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் பல ஊடகங்களின் வாயிலாக இன்று மக்கள் முன்னிலையில் உண்மையை நிலைநாட்ட முடியும். எனவே, கல்வியாளர்களும், ஈமானிய மக்களும், ரசூலுல்லாஹ்வை (ஸல்) பின்பற்றுவார்களும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது கடமையாகும். அவர்கள் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் அடியார்களுக்கு அவனது செய்தியை எத்தி வைக்க வேண்டும். அல்லாஹ்வின் விஷயத்தில் எவரது நிந்தனைக்கும் அஞ்சக்கூடாது. உயர்ந்தவர்-தாழ்ந்தவர், பணக்காரர்-ஏழை என்ற பாகுபாடின்றி, அல்லாஹ் இறக்கி அருளியது போலவும் சட்டமாக்கியது போலவும் அவனது கட்டளைகளை எத்தி வைக்க வேண்டும்.

ஒரு இடத்தில் உங்களைத் தவிர இப்பணியைச் செய்ய வேறு யாரும் இல்லையென்றால், அது உங்களுக்கு ‘ஃபர்ளு ஐன்’ (தனிநபர் கடமை) ஆகிவிடும். நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதைப் போன்றதுதான் இதுவும். இது சில நேரங்களில் ‘ஃபர்ளு ஐன்’ ஆகவும், சில நேரங்களில் ‘ஃபர்ளு கிஃபாயா’ ஆகவும் அமையும். இப்பணியைச் செய்ய உங்களைத் தவிர வேறு எவருக்கும் ஆற்றல் இல்லை என்றால், அதை நிறைவேற்றுவது உங்கள் மீது கட்டாயமாகும். ஆனால், அழைப்புப் பணி செய்யவும், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கவும் மற்றவர்கள் இருந்தால், அது உங்கள் மீது சுன்னத்தாகும். அதில் நீங்கள் முன்வந்தால், நன்மைகளில் போட்டியிடுபவராகவும், புண்ணியங்களில் முன்னேறுபவராகவும் திகழ்வீர்கள்.

தஃவா பணி ‘ஃபர்ளு கிஃபாயா’ என்பதற்கு ஆதாரமாகக் கூறப்படும் ஒரு வசனம்:

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி,(திரு குர்ஆன்- 3/104)

இமாம் இப்னு கஸீர் (ரஹ்மிஹுல்லாஹ்) உள்ளிட்ட அறிஞர்கள் இவ்வசனத்தை விளக்கும் போது கூறுகிறார்கள்:

“இந்த மகத்தான பணியை நிறைவேற்றுவதற்காக உங்களில் ஒரு கூட்டத்தினர் எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைக்க வேண்டும், அவனது தீனை (மார்க்கத்தை) பரப்ப வேண்டும், மேலும் அவனது கட்டளைகளை மக்களிடம் எத்தி வைக்க வேண்டும்.”

நபி ﷺ அவர்கள் மக்காவில் தம்மால் இயன்றவரை தஃவாப் பணிகளை மேற்கொண்டார்கள் என்பதும், ஸஹாபாக்கள் (ரலி) அவர்கள் தங்களது சக்திக்கு ஏற்ப அதைச் செய்தார்கள் என்பதும் நமக்குத் தெரியும். ஹிஜ்ரத்திற்குப் பிறகு, அவர்கள் இன்னும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். நபியவர்களின் மறைவுக்குப் பின், இஸ்லாம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியபோது, அவர்கள் தங்களது ஆற்றலுக்கும் அறிவுக்கும் ஏற்ப அந்தப் பணியைத் தொடர்ந்தனர்.

இன்று பிரச்சாரகர்கள் குறைந்து, தீமைகளும் அறியாமையும் பெருகிவரும் சூழலில், ஒவ்வொருவரும் தம்மால் இயன்றவரை தஃவா செய்வது ‘ஃபர்ளு ஐன்’ (தனிநபர் கடமை) ஆகிறது.

முக்கியக் குறிப்புகள்:

▪️ ஊர் அல்லது நகரம்: ஒரு குறிப்பிட்ட பகுதியில் இந்தப் பணியைச் செய்யப் போதுமான ஆட்கள் இருந்தால், மற்றவர்களுக்கு அது ‘சுன்னத்’ ஆகிவிடும். ஏனெனில், ஒரு குழுவின் மூலம் அல்லாஹ்வின் கட்டளை நிலைநாட்டப்பட்டுவிட்டது.

▪️ உலகளாவிய நிலை: உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மார்க்கத்தை எத்தி வைப்பது அறிஞர்கள் (உலமாக்கள்) மற்றும் ஆட்சியாளர்களின் கடமையாகும். இது அவர்களின் சக்திக்கும் தகுதிக்கும் ஏற்ப ‘ஃபர்ளு ஐன்’ ஆகக் கருதப்படுகிறது.

▪️இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால், தஃவா (பிரச்சாரம்) என்பது ‘ஃபர்ளு ஐன்’ (தனிநபர் கடமை) என்பதா அல்லது ‘ஃபர்ளு கிஃபாயா’ (சமூகக் கடமை) என்பதா சூழ்நிலையைப் பொறுத்தது.

▪️ சில நபர்களுக்கும் சமூகங்களுக்கும் இது ‘ஃபர்ளு ஐன்’ ஆக இருக்கலாம்.

▪️ இன்னும் சிலருக்கு இது ‘சுன்னத்’ ஆக இருக்கலாம்; ஏனெனில், அவர்கள் வாழும் பகுதியில் அந்தப் பணியைச் செய்ய மற்றவர்கள் முன்வந்திருப்பார்கள்.

▪️ஆட்சியாளர்களின் கடமை: இருப்பினும், ஆட்சியாளர்களுக்கும் அதிக அதிகாரமும் வசதிகளும் கொண்டவர்களுக்கும் இதில் கூடுதல் பொறுப்பு உள்ளது. அவர்கள் தங்களால் இயன்ற அனைத்து நாடுகளுக்கும், சாத்தியமான எல்லா வழிகளிலும் இறைச் செய்தியை எத்தி வைக்க வேண்டும்.

▪️ பன்மொழிப் பிரச்சாரம் : மக்கள் பேசும் பல்வேறு மொழிகளில் தஃவா செய்யப்பட வேண்டும்.

▪️ மொழிபெயர்ப்பு : அரபு மொழியிலும், மற்ற மொழிகளிலும் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும். இதன் மூலம், ஒவ்வொருவருக்கும் தங்களுக்குத் தெரிந்த மொழியில் அல்லாஹ்வின் மார்க்கம் (தீன்) போய்ச் சேர வேண்டும்.

இன்று ரேடியோ, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என முன்னெப்போதும் இல்லாத நவீன ஊடகங்கள் வாயிலாக இந்தப் பணியைச் செய்வது சாத்தியமாகியுள்ளது. பண்டிகை காலங்களிலும், ஜுமுஆ உரைகளிலும் மற்றும் இதர சந்தர்ப்பங்களிலும் கத்தீப்கள் (உரையாளர்கள்) தங்களால் இயன்றவரை அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், மார்க்கத்தைப் பரப்புவதும் கட்டாயமாகும் (வாஜிப்).

▪️தற்போதைய சூழலில் இதன் முக்கியத்துவம்: இன்று அழிவுண்டாக்கும் கொள்கைகள், நாத்திகம், இறைமறுப்பு, மறுமை மற்றும் நுபுவ்வத்தை (நபித்துவம்) நிராகரித்தல் மேலும், பல நாடுகளில் கிறிஸ்தவ மிஷனரி செயல்பாடுகள் பரவி வருகிறது இதர வழிகேடுகள் போன்றவற்றுக்கான அழைப்புகள் பெருகிவிட்டன. எனவே, இன்று அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பது என்பது ஒரு பொதுவான கட்டாயக் கடமையாக (ஃபர்ளு) மாறியுள்ளது.

▪️ அறிஞர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பங்கு: இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து அறிஞர்களும் ஆட்சியாளர்களும் இந்தப் பணியைச் செய்வது கடமையாகும். எழுத்து, பேச்சு, வானொலி மற்றும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை எத்தி வைக்க வேண்டும்.

▪️ ஒற்றுமையின் அவசியம்: இதில் அலட்சியம் காட்டவோ, மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒதுங்கி இருக்கவோ கூடாது. முன்னெப்போதையும் விட இன்று இந்த மகத்தான பணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும்.

▪️ எதிர்ப்புகளை எதிர்கொள்ளுதல்: அல்லாஹ்வின் எதிரிகள் எல்லா வழிகளையும் பயன்படுத்தி மக்களை நல்வழியிலிருந்து தடுக்கவும், மார்க்கத்தில் சந்தேகங்களை உண்டாக்கவும் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். எனவே, அத்தகைய நாத்திக மற்றும் வழிகேடான பிரச்சாரங்களை இஸ்லாமிய அழைப்புப் பணிகளின் மூலம் எதிர்கொள்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
அல்லாஹ் தனது அடியார்களுக்கு கட்டாயமாக்கிய அந்தப் பிரச்சாரப் பணியை நிறைவேற்ற, அனுமதிக்கப்பட்ட அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்த வேண்டும்.

தஃவாப் பணியின் சிறப்புகளையும், பிரச்சாரகர்களின் அந்தஸ்தையும் விளக்கும் ஏராளமான வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன. நபி ﷺ அவர்கள் பல்வேறு இடங்களுக்குப் பிரச்சாரகர்களை அனுப்பி வைத்த வரலாறு அறிஞர்களுக்கு நன்கு தெரிந்ததே. அவற்றில் ஒன்றுதான் அல்லாஹ்வின் இந்த வசனம்:

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் ஒருவன்” என்றும் கூறுகிறாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்? ( திரு குர்ஆன் – 41/33)

இந்த வசனத்தில் பிரச்சாரகர்கள் (தஃவா செய்பவர்கள்) புகழப்படுகிறார்கள். அவர்களை விடச் சிறந்த சொல்லைச் சொல்பவர் வேறு எவருமில்லை என்று கூறப்படுகிறது. இந்த வரிசையில் முதன்மையானவர்கள் இறைத்தூதர்கள் (அலைஹிமுஸ்ஸலாத் வஸ்ஸலாம்) ஆவார்கள். அவர்களைத் தொடர்ந்து, தஃவாப் பணி, கல்வி மற்றும் சிறப்புகளில் அவர்களுக்கு அடுத்தடுத்த நிலையில் இருப்பவர்கள் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

அல்லாஹ்வின் அடியாரே! இறைத்தூதர்களின் வழித்தோன்றல்களில் ஒருவராக இருப்பதும், இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பிற்குரியவர்களில் ஒருவராக நீங்களும் இடம்பெறுவதும் உங்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அந்தஸ்தாகும்.

அவன் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறான், அதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறான், தான் எதை நோக்கி அழைக்கிறானோ அதன்படி தானும் செயல்படுகிறான்; இதனால்தான் அவனை விடச் சிறந்த சொல்லைச் சொல்பவர் வேறு எவருமில்லை என்று சொல்லப்பட்டது. அதாவது, அவன் சத்தியத்தின் பக்கம் அழைக்கிறான், அதைச் செயல்படுத்துகிறான்; அசத்தியத்தை (பொய்யை) நிராகரிக்கிறான், அதைக் குறித்து எச்சரிக்கிறான், அதிலிருந்து விலகியும் இருக்கிறான்.

அதே சமயம், தான் எதில் உறுதியாக இருக்கிறானோ அதை அவன் பகிரங்கமாக அறிவிக்கிறான். அவன் வெட்கப்படவில்லை, மாறாக “நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறுகிறான். அல்லாஹ் தனக்கு அளித்த அருளைக் கண்டு அவன் மகிழ்ச்சியடைகிறான். யாரையாவது திருப்திப்படுத்தவோ அல்லது யாருக்காவது பயந்தோ தான் ஒரு முஸ்லிம் என்பதையோ, இஸ்லாத்தின் பக்கம் அழைக்கிறேன் என்பதையோ சொல்லத் தயங்குபவர்களைப் போன்றவன் அல்ல அவன்.

அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்ற, உறுதியான ஈமான் (நம்பிக்கை) கொண்ட, அல்லாஹ்வின் விஷயத்தில் தெளிந்த ஞானம் பெற்ற ஒரு முஃமின் (சத்திய விசுவாசி), அல்லாஹ்வின் ஹக்கை (உரிமையை) பகிரங்கமாக அறிவிப்பான். அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதில் (தஃவாவில்) அவன் சுறுசுறுப்பாக இருப்பான். எதை நோக்கி அழைக்கிறானோ அதன்படி செயல்படுவான். எதைத் தடுக்கிறானோ அதை விட்டும் விலகியிருப்பான். அவன் எதன்பக்கம் அழைக்கிறானோ அதில் மிக விரைவாக முன்னேறுபவனாகவும், எதைத் தடுக்கிறானோ அதை விட்டும் மிகத் தொலைவில் இருப்பவனாகவும் இருப்பான்.

அதே சமயம், தான் ஒரு முஸ்லிம் என்றும், இஸ்லாத்தின் பக்கமே அழைக்கிறேன் என்றும் அவன் பகிரங்கமாக அறிவிப்பான். அதில் அவன் பெருமகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைவான்.

அல்லாஹ் கூறுகிறான்:

قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

‘‘(இதை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது” என்றும் (நபியே!) கூறுவீராக. ( திரு குர்ஆன் – 10/58)

அல்லாஹ்வின் கருணையிலும் அவனது அருட்கொடைகளிலும் மகிழ்ச்சி அடைவது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், தடுக்கப்பட்ட மகிழ்ச்சி என்பது ஆணவத்தாலும் கர்வத்தாலும் ஏற்படுவதாகும். காரூனின் வரலாற்றில் அல்லாஹ் கூறுவது போல:

لَا تَفْرَحْ ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ

இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் ‘‘ நீ (கர்வத்துடன்) மகிழ்ச்சி அடையாதே! (கர்வம் கொண்டு) மகிழ்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை” (திரு குர்ஆன் – 28/76)

இது ஆணவத்தாலும், மக்களிடம் காட்டும் கர்வத்தாலும் உண்டாகும் மகிழ்ச்சியாகும். இத்தகைய மகிழ்ச்சியே தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அல்லாஹ்வின் மார்க்கத்தில் (தீன்) மகிழ்ச்சி அடைவதும், அவனது நேர்வழியில் மகிழ்ச்சி கொள்வதும், அதை பகிரங்கமாக அறிவிப்பதும் அனுமதிக்கப்பட்ட, புகழுக்குரிய மற்றும் மிகச் சிறந்த காரியமாகும்.

இந்த வசனம், தஃவா (பிரச்சாரம்) பணியின் சிறப்பை விளக்கும் மிகத்தெளிவான வசனங்களில் ஒன்றாகும். இது மிக முக்கியமான நற்செயல்களில் ஒன்று என்பதையும், இந்தப் பணியைச் செய்பவர்களுக்கு மிக உயர்ந்த அந்தஸ்தும் பதவியும் உண்டு என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது. இந்த வரிசையில் முதன்மையானவர்கள் இறைத்தூதர்கள் (அலைஹிமுஸ்ஸலாத் வஸ்ஸலாம்) ஆவார்கள். அவர்களில் மிகவும் பரிபூரணமானவர், அவர்களின் தலைவரும் இமாமுமாகிய நமது நபி முஹம்மது ﷺ அவர்கள் ஆவார்கள். அதே போன்று அல்லாஹ்வின் இந்த வசனமும்:

قُلْ هَـٰذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ ۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي

(நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம்.( திரு குர்ஆன் – 12/108)

நபி ﷺ அவர்கள் தெளிவான ஞானத்துடனும் (பஸீரத்) தொலைநோக்குப் பார்வையுடனும் பிரச்சாரம் செய்தார்கள் என்பதையும், அவர்களைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறே செய்கிறார்கள் என்பதையும் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். இது தஃவாப் பணியின் மேன்மையை உணர்த்துகிறது. நபியவர்களைப் பின்பற்றுபவர்கள், அல்லாஹ்வின் பக்கம் தெளிவான ஞானத்துடன் அழைப்பவர்கள் ஆவார்கள். பஸீரத் என்றால், தான் எதன் பக்கம் அழைக்கிறோம் மற்றும் எதை விட்டும் தடுக்கிறோம் என்பதைப் பற்றிய முழுமையான அறிவாகும். இது அவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு சிறந்த அந்தஸ்தும் கண்ணியமும் ஆகும்.

நபி ﷺ அவர்கள் ஒரு ஸஹீஹான ஹதீஸில் இவ்வாறு கூறுகிறார்கள்:

مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ

யாராவது ஒருவர் நன்மையைச் சுட்டிக்காட்டினால் (வழிகாட்டினால்), அதைச் செய்பவருக்குக் கிடைப்பதைப் போன்றே இவருக்கும் நற்பலன் (கூலி) உண்டு.” (முஸ்லிம்)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا

யாராவது ஒருவர் நேர்வழியின் பக்கம் (மக்களை) அழைத்தால், அவரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் நற்பலனைப் போலவே இவருக்கும் கிடைக்கும். இதனால் அவர்களின் நற்பலனில் (கூலியில்) எந்தக் குறைவும் ஏற்படாது. அதேபோல, யாராவது ஒருவர் வழிகேட்டின் பக்கம் அழைத்தால், அவரைப் பின்பற்றுபவர்களின் பாவத்தைப் போலவே இவருக்கும் சேரும். இதனால் அவர்களின் பாவத்தில் எந்தக் குறைவும் ஏற்படாது.” (முஸ்லிம்)

இதுவும் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதன் (தஃவா) சிறப்பைத் தெளிவுபடுத்துகிறது.

அலி (ரலி) அவர்களிடம் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

فَوَ اللَّهِ لأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلاً وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உன் மூலமாக ஒரு மனிதருக்கு அல்லாஹ் நேர்வழி (ஹிதாயத்) காட்டுவது, உனக்குச் சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதை விட மிகச் சிறந்ததாகும்.” (புஹாரி, முஸ்லிம்)

இதுவும் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதன் சிறப்பையும், அதில் அடங்கியுள்ள மகத்தான நன்மைகளையும் தெளிவுபடுத்துகிறது. அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு, அவர் மூலமாக நேர்வழி பெற்றவர்கள் எத்தனை ஆயிரம் பேராக இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதைப் போன்றே இவருக்கும் நற்பலன் கிடைக்கும். அழைப்பவரே! அவர்களுக்குக் கிடைக்கும் அதே கூலி உங்களுக்கும் கிடைக்கும் என்பதை எண்ணி இந்த மகத்தான நன்மையில் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்.

இதிலிருந்து, நபி ﷺ அவர்களுக்கு அவர்களைப் பின்பற்றுபவர்களின் நற்பலனைப் போன்றே கிடைக்கும் என்பது தெளிவாகிறது. இது எவ்வளவு பெரிய அருட்கொடை! கியாமத் நாள் வரை நமது நபியைப் பின்பற்றுபவர்கள் செய்யும் அனைத்து நற்செயல்களின் கூலியைப் போலவே அவருக்கும் கிடைக்கும். ஏனெனில், அவர்தான் அல்லாஹ்வின் செய்தியை மக்களிடம் எத்தி வைத்து, அவர்களுக்கு நல்வழியைக் காட்டினார். அதேபோல, மற்ற இறைத்தூதர்களுக்கும் (அலைஹிமுஸ்ஸலாத் வஸ்ஸலாம்) அவர்களைப் பின்பற்றியவர்களின் கூலியைப் போலவே கிடைக்கும்.

அழைப்பவரே! எல்லா காலத்திலும் உங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் உங்கள் பிரச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்களின் கூலியைப் போன்றே உங்களுக்கும் கிடைக்கும். எனவே, இந்த மகத்தான நன்மையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதன் பக்கம் விரைந்து முன்னேறுங்கள்.

 

ஷைக் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எழுதிய الدعوة إلى الله وأخلاق الدعاة (அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதும் அழைப்பாளர்களின் பண்புகளும்) என்ற நூலிலிருந்து

 

www.kanzululoom.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *