நோன்பு வெறும் பசியாக மட்டும் முடிந்துவிடும் துரதிர்ஷ்டத்தை அடையாமல் பார்த்துக்கொள்வதற்கு

அல்லாஹ்வுக்குச் செய்யும் இபாதத்துகளில் (வணக்கவழிபாடுகளில்) எளிமையானவையும், இலகுவானவையும், சிரமமானவையும் உள்ளன. எனவே அவற்றிற்கான நன்மைகளும் (பிரதிபலன்களும்) வெவ்வேறாகவே இருக்கும்.

சற்று சிரமங்களைச் சகித்து நிறைவேற்ற வேண்டிய ஒரு இபாதத்தாகும் நோன்பு. உண்ணும் உணவும், குடிக்கும் நீரும் தன்னிடம் இருந்தும் கூட, 12 மணி நேரத்திற்கும் மேலாக அவற்றைக் கைவிட்டு நோன்பு நோற்கிறோம். சில நேரங்களில் அது கடுமையான வெயில் காலமாக இருக்கலாம். சில நேரங்களில் கடுமையான வேலைகளுக்கு மத்தியிலும் நோன்பு நோற்க வேண்டியிருக்கும். இவ்வாறு கஷ்டங்களைச் சகித்து நிறைவேற்றும் நோன்பிற்கு கிடைக்கும் நன்மைகளும் நம்மால் கணக்கிட முடியாத அளவிற்கு மிகப் பெரியதாக இருக்கும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ :‏ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلاَّ الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: “மனிதனின் ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை நற்கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பைத் தவிர; அதற்கு நானே (கணக்கின்றி) கூலி வழங்குவேன்.” (முஸ்லிம்: 1151)

அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உணவையும் நீரையும் தவிர்த்ததாலேயே அனைவருக்கும் நோன்பின் முழுமையான நற்கூலி கிடைத்துவிடுமா? இல்லை என்பதே அதன் பதில். நோன்பாளி நோன்பு துறக்கும் (இஃப்தார்) வேளையில் இவ்வாறுதான் பிரார்த்திக்கிறார்:

ذَهَـبَ الظَّمَـأُ، وَابْتَلَّـتِ العُـروق، وَثَبَـتَ الأجْـرُ إِنْ شـاءَ الله

(நோன்பு துறந்த பிறகு) தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன (குளிர்ச்சியடைந்தன). அல்லாஹ் நாடினால் அதற்கான நற்கூலியும் உறுதியாகிவிட்டது. (ஸுனன் அபூ தாவூத்: 2357 – அல்பானி இதை ‘ஹஸன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்)

ஆம், நோன்பாளிக்கு நற்கூலி கிடைக்க வேண்டும் என்றால் அல்லாஹ் நாட வேண்டும். அப்படியானால், நோன்பு நோற்பவர் சில விஷயங்களை விசேஷமாக கவனிக்க வேண்டும் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

சில நோன்பாளிகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ : رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلاَّ الْجُوعُ. وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلاَّ السَّهَرُ

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எத்தனையோ நோன்பாளிகள் இருக்கிறார்கள், அவர்களுக்குத் தங்களது நோன்பின் மூலம் பசியைத் தவிர வேறு எந்தப் பயனும் கிடைப்பதில்லை. எத்தனையோ இரவுத் தொழுகையாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குத் தங்களது தொழுகையின் மூலம் விழித்திருப்பதைத் தவிர வேறு எந்தப் பயனும் கிடைப்பதில்லை.”
(இப்னு மாஜா: 1690 / அஹ்மத்: 8856)

கடுமையான வெயில் காலத்தில் வேலை செய்து கொண்டு, சிரமப்பட்டு நோன்பு நோற்றுவிட்டு, மறுமையில் அந்த நோன்பிற்கு எந்தப் பலனும் (நற்கூலியும்) இல்லை என்றால், அவனை விடப் பெரிய துரதிர்ஷ்டசாலி யார் இருக்க முடியும்? நோன்பு என்பது வெறும் பட்டினியாக மட்டும் முடிந்துவிடும் இத்தகைய துரதிர்ஷ்டசாலியாக நாம் ஆகிவிடக்கூடாது என்றால், இப்போதே கவனமாக இருக்க வேண்டும். நமது நோன்பைப் பாழாக்கிவிடும் காரியங்களிலிருந்து நாம் முற்றிலும் விலகி இருக்க வேண்டும். அதற்கு முதலில் அவற்றைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நோன்பைப் பயனற்றதாக்கும் சில காரியங்கள் இதோ:

(1) அல்லாஹ் தடுத்த (ஹராமாக்கிய) காரியங்களைச் செய்தல்.

عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏:‏ ‏”‏ لأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا ‏”‏ ‏.‏ قَالَ ثَوْبَانُ ‏:‏ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا جَلِّهِمْ لَنَا أَنْ لاَ نَكُونَ مِنْهُمْ وَنَحْنُ لاَ نَعْلَمُ ‏.‏ قَالَ ‏:‏ ‏”‏ أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ وَمِنْ جِلْدَتِكُمْ وَيَأْخُذُونَ مِنَ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا ‏”‏ ‏.

ஸவ்பான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக எனது உம்மத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தினரை நான் அறிவேன். அவர்கள் மறுமை நாளில் திஹாமா மலைகளைப் போன்ற வெண்மையான நன்மைகளுடன் வருவார்கள். ஆனால் அல்லாஹ் அந்த நன்மைகளைச் சிதறிப் போகும் தூசுகளைப் போல (பயனற்றதாக) ஆக்கிவிடுவான்.” அப்போது ஸவ்பான் (ரழி) அவர்கள் கேட்டார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப் பற்றி எங்களுக்கு விவரியுங்கள்; நாங்கள் அறியாமல் அவர்களில் ஒருவராக ஆகிவிடக்கூடாது என்பதற்காக எங்களுக்குத் தெளிவாகக் கூறுங்கள்.”
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அவர்கள் உங்கள் சகோதரர்கள் தான், உங்களைப் போன்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் தான். நீங்கள் இரவில் எழுந்து தொழுவதைப் போலவே அவர்களும் தொழுவார்கள். ஆனால் அல்லாஹ் ஹராமாக்கிய (தடுத்த) காரியங்களைச் செய்யத் தனிமையில் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி அந்த ஹராம்களைச் செய்வார்கள்.”
(இப்னு மாஜா: 4245 – அல்பானி ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்)

இறைநம்பிக்கையாளர்களில் பலர் தங்களின் பலவீனங்களுக்கு ஏற்ப சில பாவங்களில் விழுந்து விடுகிறார்கள். இச்சைகளுக்கு அடிமையாகியோ அல்லது ஷைத்தானின் தூண்டுதலுக்கு உள்ளாகியோ இது நிகழ்கிறது. அதிலிருந்து அவர்கள் விலகவில்லை என்றால், அவர்கள் சிரமப்பட்டு நோற்ற நோன்பு மறுமையில் அவர்களுக்குப் பயன் தராது. எனவே, செய்த பாவங்களுக்கு மன்னிப்புத் தேடி (தவ்பா செய்து), நோன்பு நோற்பதுடன், இனி வரும் காலங்களில் பாவமில்லாத வாழ்க்கையைத் தொடர முயற்சி செய்ய வேண்டும்.

(2) பிறரைச் சொல்லாலோ அல்லது செயலாலோ துன்புறுத்துதல்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ ‏”‏ ‏.‏ قَالُوا الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ ‏.‏ فَقَالَ ‏”‏ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ ‏”‏

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (தோழர்களிடம்), “திவாலாகிப் போனவர் (முஃப்லிஸ்) என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், “யாரிடம் திர்ஹமோ (பணம்) அல்லது இதர உடைமைகளோ இல்லையோ, அவரே எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” எனக் கூறினர். அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக எனது உம்மத்தில் திவாலானவர் யாரெனில், அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு மற்றும் ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். ஆனால் அவர் (இவ்வுலகில்) ஒருவரைத் திட்டியிருப்பார், இன்னொருவர் மீது அவதூறு சுமத்தியிருப்பார், ஒருவரின் சொத்தை அநியாயமாகச் சாப்பிட்டிருப்பார், ஒருவரின் இரத்தத்தைச் சிந்தியிருப்பார், மேலும் ஒருவரை அடித்திருப்பார். எனவே அவருடைய நன்மைகளிலிருந்து இவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். அவர் கொடுக்க வேண்டிய கடமைகளை முடிப்பதற்கு முன்னரே அவருடைய நன்மைகள் தீர்ந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு அவர் மீது சுமத்தப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் எறியப்படுவார்.” (முஸ்லிம்: 2581)

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَحَدٍ مِنْ عِرْضِهِ أَوْ شَىْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ ‏”‏‏.‏

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யாராவது தனது சகோதரனின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்தோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ அநீதி இழைத்திருந்தால், தீனாரோ திர்ஹமோ (பணம்) பலன் தராத ஒரு நாள் வருவதற்கு முன்பே, இவ்வுலகிலேயே அவரிடம் மன்னிப்புக் கேட்டு அந்தப் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ளட்டும். (மறுமை நாளில்) அவரிடம் ஏதேனும் நற்செயல்கள் இருந்தால், அவர் செய்த அநீதியின் அளவிற்கு அவரிடமிருந்து அந்த நன்மைகள் எடுக்கப்படும். அவரிடம் நன்மைகள் எதுவுமே இல்லை என்றால், பாதிக்கப்பட்ட சகோதரனின் பாவங்களிலிருந்து ஒரு பகுதி எடுக்கப்பட்டு இவர் மீது சுமத்தப்படும்.” (புகாரி: 2449)

(3) தீய பேச்சுகளும் செயல்களும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏:‏ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் (நோன்பு நோற்றுக்கொண்டு) பொய் பேசுவதையும், அதன்படி செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ, அவர் தனது உணவையும் பானத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி: 1901)

قَالَ أبُو عبدِ الله جَابِرُ بنُ عبدِ الله رضي الله عنهما :إذَا صُمْتَ فَليَصُمْ سَمْعُكَ وَبَصَرُكَ وَلِسَانُكَ عَنِ الكَذِبِ وَالمَحَارِمِ وَدَعْ أذَى الجَارِ وليَكُنْ عَلَيكَ وَقَارٌ وَسَكِينَةٌ يَوْمَ صَوْمِكَ وَلا تَجْعَلْ يَوْمَ صَوْمِكَ وَيَوْمَ فِطْرِكَ سَوَاءً

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நீ நோன்பு நோற்றால், உனது காதுகளும், கண்களும், நாவும் பொய்களை விட்டும் ஹராமான (தடுக்கப்பட்ட) காரியங்களை விட்டும் நோன்பு நோற்கட்டும். அண்டை வீட்டாருக்குத் துன்பம் தருவதைத் தவிர்த்துக் கொள். உனது நோன்பு நாளில் உன்னிடம் கண்ணியமும் கட்டுப்பாடும் (அமைதி) இருக்கட்டும். நீ நோன்பு நோற்றிருக்கும் நாளையம், நோன்பு இல்லாத நாளையம் சமமாக ஆக்கிவிடாதே.” (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 2/271)

(4) ஷிர்க் (இறைவனுக்கு இணைவைத்தல்).

நோன்பு நோற்கும் முஸ்லிம்கள் ஷிர்க் செய்வார்களா? சிலைகளை வணங்குவதும் பல தெய்வங்களை வணங்குவதும் மட்டுமே ஷிர்க் அல்ல. அல்லாஹ்வின் ஆற்றல்களைப் படைப்பினங்களுக்கு வழங்குவதும் ஷிர்க் ஆகும்.

அல்லாஹ் அனைத்து விஷயங்களிலும் தனித்துவமானவன் (ஏகவன்). அல்லாஹ் தனது ஆற்றல்களில் எதனையும் எந்தப் படைப்பினத்திற்கும் கொடுக்கவில்லை. அவ்வாறு கொடுத்திருப்பதாக நம்புவது ஷிர்க் ஆகும். அல்லாஹ் பார்ப்பது போலப் பார்க்கவும், அவன் கேட்பது போலக் கேட்கவும் படைப்பினங்களால் முடியும் என்று நம்புவது ஷிர்க் ஆகும். அவர்கள் நபிமார்களாக இருந்தாலும் சரி, அவ்லியாக்களாக இருந்தாலும் சரி. அவர்கள் மறைவான விஷயங்கள் அனைத்தையும் அறிவார்கள் என்று நம்புவதும் ஷிர்க் ஆகும். மரணித்தவர்களிடம் பிரார்த்தனை செய்வதும், உதவி தேடுவதும் ஷிர்க் ஆகும். இவ்வாறு ஷிர்க் செய்து கொண்டு நோன்பு நோற்றால், அது வெறும் பட்டினியாகவே முடியும்.

அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களின் செயல்களுக்கு மறுமையில் என்ன நிலை ஏற்படும் என்று உங்களுக்குத் தெரியுமா? இறைத்தூதர்களின் விஷயத்தில் கூட அல்லாஹ் இவ்வாறுதான் கூறியுள்ளான்:

ﻭَﻟَﻮْ ﺃَﺷْﺮَﻛُﻮا۟ ﻟَﺤَﺒِﻂَ ﻋَﻨْﻬُﻢ ﻣَّﺎ ﻛَﺎﻧُﻮا۟ ﻳَﻌْﻤَﻠُﻮﻥَ

அவர்கள் (இதைத் தவிர்த்து அல்லாஹ்வுக்கு) இணைவைத்தாலோ அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும். (திரு குர்ஆன் – 6/88)

وَلَقَدْ أُوحِىَ إِلَيْكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ

(நபியே!) உமக்கும், (நபிமார்களின்) உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது: (அது என்ன வென்றால், அல்லாஹ்வுக்கு) நீர் இணைவைத்தால், உமது நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர். (திரு குர்ஆன் – 39 / 65)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏:‏ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلاً أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ‏

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: “இணை வைப்பவர்களின் தேவையிலிருந்து நான் முற்றிலும் தேவையற்றவன். யாராவது ஒரு செயலைச் செய்து, அதில் என்னுடன் மற்றொன்றை இணையாக்கினால், அவரையும் அவர் செய்த அந்த ஷிர்க்கையும் (இணை வைத்தலையும்) நான் விட்டுவிடுவேன் (புறக்கணிப்பேன்).” (முஸ்லிம்: 2985)

(5) ஐந்து நேரத் தொழுகைகளைக் கைவிடுதல்.

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பலரைப் பார்க்கிறோம், அவர்கள் ஐந்து நேரக் கடமையான தொழுகைகளை நிறைவேற்றாமல் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களோ ரமலான் நோன்பை மட்டும் மிகச் சரியாக நிறைவேற்றுவார்கள். இவர்களுடைய நோன்பிற்கு மறுமையில் எந்தப் பலனும் (நற்கூலியும்) கிடைக்காது. ஏனெனில், தொழுகையைக் கைவிடுபவனுக்கு இஸ்லாத்தில் எந்த இடமும் இல்லை என்பதும், அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டான் என்பதுமே இஸ்லாமிய ஆதாரங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் உண்மையாகும்.

عَنْ جَابِرًا، يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ : إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلاَةِ

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஒரு முஸ்லிமுக்கும், ஷிர்க் (இணைவைத்தல்) மற்றும் குஃப்ருக்கும் (இறைநிராகரிப்பு) இடையில் உள்ள வித்தியாசம் தொழுகையைக் கைவிடுவதுதான்.” (முஸ்லிம்: 82)

عَنْ عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم: ‏ الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلاَةُ فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ ‏”‏ ‏.‏

புரைதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “நமக்கும் அவர்களுக்கும் (நயவஞ்சகர்களுக்கும்/காஃபிர்களுக்கும்) இடையே உள்ள உடன்படிக்கை தொழுகையாகும். எனவே, யார் அதனை (தொழுகையை) விடுகிறாரோ அவர் நிச்சயமாக (இஸ்லாத்தை) நிராகரித்துவிட்டார்.” (அபூ தாவூத்: 1079 – ஸஹீஹ்)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ الْعُقَيْلِيِّ، قَالَ كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم لاَ يَرَوْنَ شَيْئًا مِنَ الأَعْمَالِ تَرْكُهُ كُفْرٌ غَيْرَ الصَّلاَةِ‏

அப்துல்லாஹ் இப்னு ஷகீக் அல்-உகைலி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “முஹம்மது ﷺ அவர்களின் தோழர்கள் (ஸஹாபாக்கள்), தொழுகையைத் தவிர வேறு எந்தச் செயலையும் அதைக் கைவிடுவது ‘குஃப்ர்’ (இறைநிராகரிப்பு) என்று கருதியதில்லை.” (திர்மிதி: 2622)

قَالَ الشَّيخُ عبدُ العَزِيزِ بنُ عبدِ اللهِ بنِ بَازٍ رحمه الله: مَنْ تَـرَكَ الصَّلَ اةَ حَبِطَ عَمَلُهُ وَلَمْ يُقْبَلْ صِيَامُهُ

ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: “யார் தொழுகையைக் கைவிடுகிறாரோ, அவருடைய (நற்)செயல்கள் அழிந்துவிடும், மேலும் அவருடைய நோன்பும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ” (அல்-ஃபதாவா அல்-பாஸிய்யா: 15/179)

ஷைக் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: “தொழுகையை நிறைவேற்றாத ஒருவர் நோன்பு நோற்றால், அவருடைய நோன்பு மறுமையில் அல்லாஹ்விடம் நிராகரிக்கப்பட்டதாகவும், ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் இருக்கும்; அது அவருக்குப் பயன் தராது. நாம் அவரிடம் கூறுகிறோம்: ‘நீர் முதலில் தொழுவீராக, பிறகு நோன்பு நோற்பீராக’. ஏனெனில், தொழாமல் நீர் நோன்பு நோற்றால் அந்த நோன்பு உம்மீதே திருப்பி எறியப்படும். ஏனெனில் ஒரு காஃபிரிடமிருந்து (இறைநிராகரிப்பாளரிடமிருந்து) வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.” (ஃபிக்ஹுல் இபாதாத்: 1/227)

இத்தகையவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்பது இதன் கருத்தல்ல. மாறாக, அவர்கள் (தங்கள் தவறுக்காக) பாவமன்னிப்புத் தேடி (தவ்பா செய்து), நோன்பு நோற்பதுடன், தங்களது வாழ்நாள் முழுவதும் ஐந்து நேரக் கடமையான தொழுகைகளையும் நிலைநாட்ட வேண்டும்.

(6) சரியான ஈமான் (நம்பிக்கை) இன்றி நோன்பு நோற்றல்.

‘எல்லாரும் நோன்பு நோற்கிறார்கள், நான் மட்டும் எப்படி உண்ணுவது அல்லது குடிப்பது?’ என்ற எண்ணத்தில் சிலர் நோன்பு நோற்பார்கள். இத்தகைய நோன்பினால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

ஈமானோடும் (நம்பிக்கையோடும்), இஹ்திஸாபோடும் (மறுமையின் நற்கூலியை எதிர்பார்த்தும்) நோன்பு நோற்க வேண்டும். இதனை அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் பிரத்யேகமாகப் போதித்துள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் ரமலான் நோன்பை ஈமானோடும் (அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவராகவும்), இஹ்திஸாபோடும் (மறுமையின் நற்கூலியை எதிர்பார்த்தவராகவும்) நோற்கிறாரோ, அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.” (புகாரி: 1901)

ஈமானின் (நம்பிக்கையின்) அடிப்படையிலேயே நோன்பு நோற்கப்பட வேண்டும். ஈமான் என்பது அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும் (வானவர்களையும்), அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதித் தீர்ப்பு நாளையும், கலா-கத்ரையும் (விதியையும்) நம்புவதாகும். அல்லாஹ்வை நம்புவதே ஏனைய விசுவாசக் காரியங்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும்.

ஈமானுடன் சேர்த்துச் சொல்லப்பட்டது ‘இஹ்திஸாப்’ ஆகும்; அதாவது நற்கூலியை எதிர்பார்த்தல். அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலியை ஆதரவு வைக்க வேண்டும். நோன்பு நோற்பவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ள கணக்கிலடங்கா நற்கூலிகள், பாவமன்னிப்பு, சொர்க்கப் பிரவேசம் மற்றும் நரக விடுதலை போன்றவற்றை ஆசைப்பட வேண்டும்.

சத்திய விசுவாசிகளே! வெறும் பட்டினியாகப் போய்விடும் இத்தகைய துரதிர்ஷ்டசாலிகளுள் ஒருவராக ஆகிவிடாமல் இருக்கக் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அருள்பாலிப்பானாக. (ஆமீன்).

 

www.kanzululoom.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *